ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெளிநாட்டு விளையாட்டாளர்களின் பங்கேற்புடன் பல்வேறு போட்டிகளுக்கு சிலாங்கூர் ஏற்பாடு

ஷா ஆலம், பிப் 16– வெளிநாட்டு  விளையாட்டாளர்களை இலக்காக கொண்டு நடுத்தர அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை சிலாங்கூர் அரசு ஏற்று நடத்தவுள்ளது.

மாவட்ட நிலையிலான இப்போட்டிகள் அடுத்தாண்டு முதல் நடத்தப்படும் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

ஆசிய பூப்பந்து போட்டி முடிவுக்கு வந்தவுடன் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்காக மாவட்டந்தோறும் பயணம் மேற்கொள்ளவுள்ளோம். இப்போட்டிகள் வெளிநாட்டு விளையாட்டாளர்கள் பங்கேற்கக்கூடிய அனைத்துலக நிலையிலானவையாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

இப்போட்டிகளை நடத்துவதன் நோக்கம் என்னவென்றால் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்த சிலாங்கூர் எழுச்சி எனும் கருப்பொருளுக்கேற்ப விளையாட்டு உணர்வை மறுபடியும் எழுச்சியுறச் செய்வதாகும் என்றார் அவர்.

ஆசிய பூப்பந்து போட்டி நடைபெற்று வரும் செத்தியா சிட்டி மாநாட்டு அரங்கில் நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனை கூறினார்.

கோவிட்19 பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு எஸ்.ஒ.பி. கட்டுப்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதில் மாநில அரசு எப்போதும் ஒரு ஒரு படி முன்னோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு நாம் எப்போதும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் முடிவுக்காக காத்திருக்க முடியாது. ஆகவே, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி விளையாட்டுத் துறையை மேம்படுத்த முயல்கிறோம் என்றார் அவர்.


Pengarang :