ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டில் சுமார் 9,000 சுகாதாரப் பணியாளர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிப்பு

கோலாலம்பூர், பிப் 18– இந்த ஆண்டு நாட்டில் 8,940 சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறைத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் வாரத்தில் 284 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாவது வாரத்தில் 3,343 ஆக அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய் உறுதி செய்யப்பட காரணத்தால் மொத்தம் 5,711 சுகாதார பராமரிப்புப் பணியாளர்களால் (தீவிர தாக்கம் கொண்ட சம்பவங்கள்) வேலை செய்ய இயலவில்லை,
அதே நேரத்தில் நோய் கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 3,119 பேரும் வேலைக்கு வரவில்லை.

இது சுகாதார அமைச்சின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 3.1 விழுக்காடாகும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3,229 சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து இப்போது வேலைக்குத் திரும்பியுள்ளனர் என்றார் அவர்.

மலேசியாவில் இதுவரை 80.3 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். தற்போது 93.3 விழுக்காட்டு நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட அடுத்தக் கட்ட நடவடிக்கைள் யாவும் இலக்கவியல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

இதன் அடிப்படையில் கோவிட்-19 நோயாளிகள் மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவை மற்றும் கவனிப்பில் ஏற்படும் பாதிப்பு குறைந்தபட்ச அளவில் இருப்பதை உறுதிசெய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக டாக்டர் நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.


Pengarang :