ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 26,701 ஆகப் பதிவு- 118 பேருக்கு கடும் பாதிப்பு

ஷா ஆலம், பிப் 18- நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,701 ஆகப் பதிவானது. இதன் வழி நாட்டில் நோய்த் தொற்றுக்கு இலாக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 215 ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்றுப் பதிவான மொத்த நோய்த் தொற்றுகளில் 26,583 அல்லது 99.56 விழுக்காடு நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் மற்றும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

எஞ்சிய 118 சம்பவங்கள் அல்லது 0.44 விழுக்காடு கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று பதிவான கோவிட்-19 சம்பவங்களில் 26,569 உள்நாட்டினர் வாயிலாக பரவிய வேளையில் இதர 132 சம்பவங்கள் வெளிநாட்டினர் மூலம் இறக்குமதியானவை என்று அவர் தெரிவித்தார்.

நேற்று 11,744 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததாக கூறிய அவர், இதன் வழி அந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 88 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

இந்நோய் கண்டவர்களில் 216 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 141 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 19 நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து நாட்டில் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 482 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :