ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிறார்களுக்குத் தடுப்பூசி- பெற்றோர்களை அரசாங்கம் நிர்பந்திக்கிறதா? பிரதமர் மறுப்பு

இஸ்கந்தர் புத்ரி, பிப் 18 -"பிக்கிட்ஸ்" எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19  தடுப்பூசித் திட்டத்தின்  கீழ் தங்கள் பிள்ளைகளுக்குத்  தடுப்பூசி பெற பதியும்படி பெற்றோர்களை அரசாங்கம் ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை என்று பிரதமர் 
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

"பிக்கிட்ஸ்" திட்டத்தின்  மூலம்  சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியைப் செலுத்த அரசாங்கம் நிர்பந்திக்கிறது என்ற சில பெற்றோர்களின் கருத்து பொய்யானது என்று அவர் சொன்னார்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதித்தோம். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை. 
குறிப்பாக, சிறார்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் இல்லை என்றார் அவர்.

முன்பு, முதலாவது டோஸ் தடுப்பூசித் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் கூட, பலர் தடுப்பூசியின் மீது ஆர்வம் காட்டாததோடு அச்சத்தையும் வெளிப்படுத்தினர். ஆனால், அதன் பிறகு அவர்கள் தடுப்பூசியைப் பெற முண்டியடித்துக் கொண்டு வந்தனர். பின்னர் இரண்டாவது  தடுப்பூசி பெறுவது   பிரச்சனையாக இல்லாமல் போனது என்று  செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

பிக்கிட்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவோர்  எண்ணிக்கை இன்னும் 10 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இஸ்மாயில் சப்ரி இவ்வாறு கூறினார்.

நேற்று வரை, நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில்   9.6 விழுக்காட்டினர் அல்லது  341,960 பேர் பிக்கிட்ஸ் திட்டத்தின் கீழ்   முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தடுப்பூசி குறித்து பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் பூஸ்டர்  எனப்படும் ஊக்கத் தடுப்பூசிகளைப் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது இஸ்மாயில் சொன்னார்.

Pengarang :