ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 72,451 பேர் சிலாங்கூர் அரசின் உதவி நிதியைப் பெற்றனர்

ஷா ஆலம், பிப் 21- கடந்தாண்டு டிசம்பர் மாதம் சிலாங்கூரில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 72,451 பேர் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். இன்று காலை 10.00 மணி வரை பதிவான எண்ணிக்கை இதுவாகும்.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக இதுவரை 7 கோடியே 25 லட்சத்து 81 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

வெள்ளத்தில் உயிரிழந்த 13 பேரின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 130,000 வெள்ளி உதவி நிதியும் இதில் அடங்கும் என்று இன்று சமூக ஊடகங்கள் வழி வெளியிட்ட விளக்கப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிள்ளானில் அதிகமாக அதாவது 23,450 பேர் உதவி நிதியைப் பெற்றுள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் பெட்டாலிங் மாவட்டத்தில் 16,917 பேருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

கோல லங்காட்டில் 10,282 பேரும் உலு லங்காட்டில் 7,834 பேரும் சிப்பாங்கில் 6,878 பேரும் கோல சிலாங்கூரில் 5,915 பேரும் கோம்பாக்கில் 1,042 பேரும் உலு சிலாங்கூரில் 94 பேரும் சபாக் பெர்ணமில் 40 பேரும் இந்த உதவி நிதியைப் பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் எட்டு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதம் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது. இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,000 வெள்ளியும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.


Pengarang :