ECONOMYPBTSELANGOR

வெள்ள நிவாரண நிதி- கிள்ளானில் விடுபட்ட விண்ணப்பதாரர்கள் பிரச்னைக்குத் தீர்வு

ஷா ஆலம், பிப் 24- மாநில மற்றும் மத்திய அரசின் வெள்ள நிவாரண நிதிக்கான விண்ணப்பங்கள் விடுபட்டது தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் விடுபட்டது தொடர்பில் சிறிய எண்ணிக்கையிலான புகார்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றதாகக் கூறிய கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி, விண்ணப்பதாரர்களிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றவுடன் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாகச் சொன்னார்.

முத்திரையிடப்பட்ட விண்ணப்பப் பாரங்களைப் படம் பிடித்து வைத்துக் கொள்ளும்படி வெள்ள உதவி நிதிக்கு மனு செய்தவர்களை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். தங்கள் விண்ணப்பப் பாரங்கள் விடுபட்டுப் போனதாகக் கருதுவோர் அந்தப் படங்களுடன் புகார் செய்தால் அதனை நாங்கள் சரிபார்க்கவோ அல்லது புதிதாக விண்ணப்பம் செய்யவோ முடியும் என்றார் அவர்.

இங்குள்ள கெமுனிங் உத்தாமா, எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி நிதியுதவி வழங்கும் நிகழ்வைப் பார்வையிட்ட பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கிள்ளான் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 13,997 பேர் நேற்று வெள்ள உதவி நிதியைப் பெற்றனர். இதனுடன் சேர்த்து இம்மாவட்டத்தில் வெள்ள உதவி நிதி பெற்றவர்களின் எண்ணிக்கை 46,554 பேராக உயர்ந்துள்ளது.


Pengarang :