ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் கோவிட்-19 வரலாற்றில் புதிய உச்சம் – நோய்த் தொற்றினால் நேற்று 31,199 பேர் பாதிப்பு

ஷா ஆலம், பிப் 24- நாட்டின் கோவிட்-19 நோய்த் தொற்று வரலாற்றில் ஒரே நாளில் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்ட தினமாக நேற்றைய தினம் விளங்குகிறது.  நேற்று மட்டும் 31,199 பேர்  கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் பதிவான 27,179 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 4,020 அதிகமாகும்.

நேற்று பதிவான நோய்த் தொற்றுகளில் 31,080 உள்ளுரில் பரவிய வேளையில் 119 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

ஆகக்கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நாட்டில் மிக அதிகமாக அதாவது 28,825 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின.

ஆயினும், கடுமையான பாதிப்புகளைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகள் எண்ணிக்கை 194 அதாவது 0.62 விழுக்காடாகவும் பாதிப்புக்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 31,005 பேர் அல்லது 99.38 விழுக்காடாகவும் உள்ளது.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 194 பேரில் 23.20 விழுக்காட்டினர் அல்லது 45 பேர் தடுப்பூசியை முழுமையாக அல்லது அறவே பெறாதவர்கள்.

மேலும் 108 பேர் அல்லது 55.67 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் செலுத்திக் கொள்ளாதவர்களாவர். ஊக்கத் தடுப்பூசி பெற்றப் பின்னரும் நோய்க்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 43 அல்லது 21.13 விழுக்காடாக உள்ளது.

பிரிவு வாரியாக கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 10,171 சம்பவங்கள் (32.60 விழுக்காடு)

2 ஆம் பிரிவு- 20,834 சம்பவங்கள் (66.78 விழுக்காடு)

3 ஆம் பிரிவு- 102 சம்பவங்கள் (0.32 விழுக்காடு)

4 ஆம் பிரிவு- 46 சம்பவங்கள் (0.15 விழுக்காடு)

5 ஆம் பிரிவு- 46 சம்பவங்கள் (0.15 விழுக்காடு

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நோய்த் தொற்று பரவலை சுகாதார அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருவதோடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை  அது தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று வரை 7,725 நோயாளிகள் அல்லது 2.8 விழுக்காட்டினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 265,725 பேர் அல்லது 95.5 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 4,460 பேர் அல்லது 1.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 55 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக கூறிய அவர், இதனுடன் சேர்த்து இந்நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 32,488 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

நேற்று வரை இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 5 ஆயிரத்து 157 ஆகும்.


Pengarang :