ECONOMYHEALTHNATIONALSELANGOR

மலேசிய லீக் கைப்பந்து போட்டியில் எட்டு குழுக்கள் பங்கேற்பு

ஷா ஆலம், பிப் 24- வரும் மார்ச் மாதம் 8 முதல் 13 வரை நடைபெறும் 2022 ஆம் ஆண்டு மலேசிய லீக் கைப்பந்துப் போட்டியில் எட்டு குழுக்கள் பங்கேற்கவுள்ளன.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டிலான இப்போட்டி இங்குள்ள செக்சன் 4 கைப்பந்து அரங்கில் நடைபெறவுள்ளது. 

மலேசிய கைப்பந்து சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறும் இப்போட்டியில் சிலாங்கூர், ஜோகூர், சரவா, சபா, கோலாலம்பூர், புத்ரா ஜெயா, மலேசிய ஆயுதப்படைக் குழு, தீயணைப்புக் குழு ஆகியவை பங்கேற்பதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்புப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

துடிப்புமிக்க இளைஞர் சமூகத்தை உருவாக்குவது மற்றும் ஷா ஆலமை விளையாட்டு நகராக பிரபலப்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இப்போட்டி நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து குழுக்களிலும் வெளிநாட்டு விளையாட்டாளர்களும் பங்கேற்பர் என்று அவர் மேலும் சொன்னார்.

இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு 42,000 வெள்ளி மதிப்பிலான பரிசுகள் காத்திருப்பதாகக் கூறிய அவர், முதலிடத்தைப் பெறும் குழுவுக்கு 20,000 வெள்ளி ரொக்கமும் பதக்கமும் வழங்கப்படும் என்றார் அவர்.

இரண்டாம் நிலையைப் பெறும் குழு 10,000 வெள்ளி ரொக்கம் மற்றும் பதக்கமும் பெறும். மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் வரும் குழுக்களுக்கு முறையே வெ. 8,000 மற்றும் வெ. 4,000 வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Pengarang :