ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மேப்ஸ் பி.கே.ஆர்.சி. தனிமைப்படுத்துதல் மையம் இன்று முதல் செயல்படும்

புத்ரா ஜெயா, பிப் 25- செர்டாங், மலேசியா விவசாய கண்காட்சி கூடத்தில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையம் (பி.கே.ஆர்.சி.) இன்று தொடங்கி மீண்டும் செயல்படத் தொடங்கும்.

லேசான நோய்த் தாக்கம் கொண்ட கோவிட்-19 நோயாளிகளை இலக்காக கொண்ட இந்த மையத்தில் தொடக்கமாக 100 கட்டில்கள் தயார் செய்யப்பட்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

மேப்ஸ் மையம் இன்று தொடங்கி மீண்டும் செயல்படவுள்ளது. மருத்துவமனைகளில் போதுமான அளவு கட்டில்கள் இல்லை என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, ஒமிக்ரோன் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் எந்த இடையூறுமின்றி கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் சிகிச்சையளிப்பதை நோக்கமாக கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு கோவிட்-19 நோய்த் தொற்றின் ஆகக்கடைசி நிலவரங்கள் தொடர்பில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் நோய்த் தொற்று பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு முன்னெச்சரிக்கையாக எடுத்துள்ள வியூகங்களில் பி.கே.ஆர்.சி. மையத்தை மீண்டும் திறப்பதும் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 அல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு சோதனை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இது சுகாதார அமைச்சுக்கு புதிய வகை சவாலாக உள்ளது என்றார் அவர்.

மேப்ஸ் ஒருங்கிணைந்த பி.கே.ஆர்.சி. மையம் இம்மாதம் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. கடந்த 14 மாதங்களாக இம்மையம் செயல்பட்ட போது 166,072 கோவிட்-19 நோயாளிகள் இங்கு சிகிச்சைப் பெற்றனர். இதன் மூலம் தீபகற்ப மலேசியாவிலுள்ள மருத்துமனைகளின் சுமை பெருமளவு குறைக்கப்பட்டது.

 


Pengarang :