ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலிவு விலையில் கோழி விற்பனை- மாதந்தோறும் நடத்த பொது மக்கள் கோரிக்கை

ஷா ஆலம், பிப் 27- சிலாங்கூர் மாநில அரசு தற்போது அமல்படுத்தி வரும் கோழி, முட்டை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவு விலையில் விற்கும் இயக்கம் குறைந்தது மாதம் ஒரு முறையாவது நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவுப் பொருள்களின் விலை அபரிமித உயர்வு கண்டு வரும் நடப்புச் சூழலில் மாநில அரசின் இத்திட்டம் மக்களுக்கு பெரிதும் துணை புரிவதாக ஜூவேரா டின் (வயது 71) என்ற மாது கூறினார்.

பொது மக்கள் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்கு ஏதுவாக மாநில அரசு இத்திட்டத்தை மாதந்தோறும் நடத்தும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள செக்சன் 18 பகுதியில் இன்று நடைபெற்ற மலிவு விலையில் கோழி மற்றும் அத்தியாவசியப் உணபுப் பொருள் விற்பனை இயக்கத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, சந்தையை விட மிகவும் மலிவான விலையில் பொருள்களை வாங்குவதற்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை தாம் நழுவ விடவில்லை என்று யீ கா மென் (வயது 82) என்ற ஆடவர் கூறினார்.

நான் இங்கு கோழி, அரிசி மற்றும் முட்டைகளை வாங்கினேன். கோழியின் விலை கிலோ 8.00 வெள்ளி என்பது மிகவும் மலிவானது. கூடுதல் அனுகூலமாக பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில் இங்கு பொருள்கள் வாங்குவோருக்கு 5.00 வெள்ளிக்கான கூப்பன்களும் வழங்கப்பட்டன என்றார் அவர்.

சந்தையில் பி கிரேடு முட்டை 14.00 வெள்ளிக்கு விற்கப்படும் நிலையில் இங்கு வெ.11.70 விலையில் கிடைக்கிறது. ஐந்து கிலோ அரிசியின் விலை 13.00 வெள்ளிதான். இந்த விலை மிகவும் மலிவானது என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த மலிவு விலை விற்பனை தொடர்பான தகவலை தாம் வாட்ஸ்அப் புலனம் மூலம் அறிந்து அண்டை வீட்டு குடியிருப்பாளருடன் இங்கு பொருள்களை வாங்க வந்ததாக திருமதி டி. திலகம் (வயது 55) தெரிவித்தார்.

இப்போது கோழி கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. பேரங்காடிகளிலும் வெகு விரைவில் முடிந்து விடுகிறது. அப்படியே கிடைத்தாலும் அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இங்கு வாங்கும் பொருள்களுக்கு விலைக் கழிவை வழங்கும் வகையில் 5.00 வெள்ளிக்கான கூப்பன்களை வழங்கி உதவிய பத்து தீகா சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

 

 


Pengarang :