ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 239 பேர் போட்டி- 15 இந்தியர்கள் களம் காண்கின்றனர்

ஜோகூர் பாரு, பிப் 27- ஜோகூர்  மாநிலத்தின் 15 வது தேர்தல் வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் தேசிய முன்னணி, பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி, பெரிக்கத்தான் நேஷனல் மூடா, வாரிசான், பெஜூவாங் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

தேசிய முன்னணியும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சியும் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடும் வேளையில் பக்கத்தான் ஹராப்பான் 30 தொகுதிகளிலும் பெஜூவாங் 42 தொகுதிகளிலும் பிகேஆர் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சுயேச்சைகளாக 20 பேர் களம் காண்கின்றனர்.

மேலும் மூடா எனப்படும் மலேசிய ஜனநாயக ஐக்கியக் கூட்டணி 7 இடங்களிலும் வாரிசான் 6 இடங்களிலும் பார்ட்டி பங்சா மலேசியா 4 இடங்களிலும் புத்ரா கட்சி ஒரு இடத்திலும் பி.எஸ்.எம். எனப்படும் மலேசியச் சோசலிசக் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் மொத்தம் 15 இந்திய வேட்பாளர்கள் பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துத் தேர்தலைச் சந்திக்கின்றனர்.

பூலோ காசா தொகுதியில் பி.கே.ஆர். கட்சி சார்பில் சி. சுப்பிரமணி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் நான்கு  முனைப் போட்டி நடைபெறுகிறது.

கெமலா தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளரான என். சரஸ்வதி களம் காண்கிறார். இத்தொகுதியிலும் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது

பெக்கோ தொகுதியில் இரு இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். ஜசெக சார்பில் எம். கண்ணன் போட்டியிடும் வேளையில் வாரிசான் கட்சியைப் பிரதிநிதித்து . சந்திரச் சேகரன் களம் காண்கிறார். முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ் ராமகிருஷ்ணன் இத்தொகுதியில் கடந்த முறை பி.கே.ஆர். கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கிட் நானிங் தொகுதியில் நடைபெறும் ஐந்து முனைப் போட்டியில் எஸ். ஜெகநாதன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

மாச்சாப் தொகுதியல் சங்கரன் ரவிசந்திரன் மூடாக் கட்சியைப் பிரதிநிதித்துத் தேர்தலைச் சந்திக்கிறார்.

லாயாங் லாயாங் தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் பெர்சத்து கட்சியைப் பிரதிநிதித்து அழகேந்திரன் கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் முன்னாள் கல்வியமைச்சரும் பக்கத்தான் மந்திரி புசார் வேட்பாளருமான டாக்டர் மஸ்லி மாலி பி.கே.ஆர். கட்சி சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலோ தொகுதியில் பாஸ் கட்சி சார்பில் (பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி) செல்வேந்திரன் வேலு போட்டியிடுகிறார்.

தற்போது மஇகா வசமுள்ள காஹாங் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள நடப்புச் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வித்தியாநந்தன் போட்டியிடுகிறார்.

மஇகா வசமுள்ள மற்றொரு தொகுதியான தெங்காரோவில் நடப்பு உறுப்பினர் ரவீன் கிருஷ்ணசாமி தேசிய முன்னணி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஏழு முனை போட்டி நிலவும் திராம் தொகுதியில் அதிகமாக அதாவது மூன்று இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாலச் சுந்தரம் பெருமாள் மற்றும் ஜே. ஜெயச் சங்கர் ஆகியோர் சுயேச்சைகளாகவும் எஸ். கோபாலகிருஷ்ணன் பி.கே.ஆர். சார்பிலும் களம் காண்கின்றனர்.

கோத்தா இஸ்கந்தார் தொகுதியில் ஆர்.அரங்கண்ணல் பி.எஸ்.எம். கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இம்மாநிலத் தேர்தலில் அக்கட்சி நிறுத்தியுள்ள ஒரே வேட்பாளர் இவராவார்.

புக்கிட் பத்துத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மஇகாவைச் சேர்ந்த சுப்பையா சோலைமுத்து போட்டியிடுகிறார்.

 


Pengarang :