ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மலிவு விலையில் கோழி, முட்டை விற்பனைத் திட்டத்திற்கு வரவேற்பு

சபா பெர்ணம், பிப் 28– சிலாங்கூர் மாநில அரசின் விலைக் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ்க் கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் விற்கும் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

இம்மாதம் 7 ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 20,000 கோழிகள் மலிவு விலையில் விற்கப்பட்டுள்ளதாக விவசாயத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹஷிம் கூறினார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் இதுவரை 15,000 கோழி முட்டைகளும் விற்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்விரு உணவுப் பொருள்களும் ஷா ஆலமில் உள்ள பி.கே.பி.எஸ். தலைமையகம் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தை ஆகிய இடங்களில் விற்கப்படுவதோடு வட்டார மக்களும் இத்திட்டத்தின் வழி பயன்பெறுவதற்கு ஏதுவாக லோரி ஏசான்  வழி நடமாடும் விற்பனை சேவையும் வழங்கப்படுகிறது என்றார் அவர்.

மக்கள் பரிவு விற்பனைத் திட்டம் அமலில் இருந்து வந்த போதிலும் இந்த மலிவு விலை கோழி விற்பனைத் திட்டமும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள தாமான் பெர்ஜெயா பாலாய் ராக்யாட்டில் இத்திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பி.கே.பி.எஸ். வாயிலாக மாநில அரசு கோழிகளை கிலோ 8.00 வெள்ளி விலையில் விற்பனை செய்து வருகிறது. இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து பத்து லட்சம் வெள்ளியில் 50,000 கோழிகள் மக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.


Pengarang :