ECONOMYNATIONALPBT

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சமூக மேம்பாட்டு அமைச்சு இவ்வாண்டு வெ.45 லட்சம் ஒதுக்கீடு

சுக்காய், மார்ச் 1- இவ்வாண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சு இவ்வாண்டு 45 லட்சம் வெள்ளியை வழங்கியது.

இந்த நிதி தனது அமைச்சின் கீழுள்ள சமூக நலத் துறையின் வாயிலாக உணவு, தனிநபர் அத்தியாவசியப் பொருள்கள், போர்வை போன்ற பொருள்களாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாக அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரீனா முகமது ஹருண் கூறினார்.

இதுவரை கெடாச் சிலாங்கூர், கிளந்தான், திரங்கானு, பகாங், சபா, ஜோகூர், மற்றும் சரவா ஆகிய மாநிலங்களுக்குத் தலா 500,000 வெள்ளி வீதம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூருக்குத் தலா 100,000 வெள்ளியும் மலாக்காவுக்கு 150,000 வெள்ளியும் பினாங்கிற்கு 50,000 வெள்ளியும் வழங்கப்பட்ட வேளையில் பெர்லிஸ் மற்றும் லாபுவான் ஆகியவை தலா 30,000 வெள்ளியைப் பெற்றன என்றார் அவர்.

பேரிடரின் போது விநியோகம் செய்வதற்கு ஏதுவாக அத்தியாவசியப் பொருள்களை முன்கூட்டியே வாங்கிக் கிடங்குகளில் சேமித்து வைப்பதற்காக இந்த ஒதுக்கீடு சமூக நலத்துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள புக்கிட் மெந்தோக் இடைநிலைப்பள்ளியில் செயல்படும் தற்காலிக நிவாரண மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :