ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை திரங்கானுவில் உயர்கிறது- கிளந்தானில் குறைகிறது

கோலாலம்பூர், மார்ச் 1- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிளந்தானில் குறைந்து வரும் வேளையில் திரங்கானுவில் ஏற்றம் காண்கிறது.

திரங்கானு மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 4,557 குடும்பங்களைச் சேர்ந்த 17,742 துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.  நேற்று இந்த எண்ணிக்கை  14,393 பேராக இருந்தது.

ஆற்று முகத்துவாரங்களில் குறிப்பாகக் கெமாமானில் நேற்றிரவு நீர்ப் பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதால் நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது.

திரங்கானு மாநிலத்திலுள்ள எட்டு மாவட்டங்களில் 141 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநிலப் பேரிடர் நிர்வாகக் க் குழு கூறியது.

கிளந்தான் மாநிலத்தில் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றிரவு 2,600 குடும்பங்களைச் சேர்ந்த 8,054 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடிய வேளையில் இன்று காலை 8.00 மணியளவில் 2,483 குடும்பங்களைச் சேர்ந்த 7,625 பேர் மட்டுமே தங்கியுள்ளனர்.

கிளந்தானில் பாசீர் மாஸ், தானா மேரா, கோல கிராய், பாசீர் பூத்தே, மாச்சாங், ஜெலி ஆகிய மாவட்டங்களில் 46 துயர் துடைப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் செயலி கூறியது.


Pengarang :