ECONOMYPBTSELANGOR

வெள்ள உதவி நிதி பெறும் தேதியைத் தவறவிட்டவர்கள் மாவட்ட அலுவலகம் வரத் தேவையில்லை

ஷா ஆலம், மார்ச் 2– பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் வெள்ள நிவாரண நிதியைப் பெறுவதற்கான தேதியைத் தவறவிட்ட கிள்ளான் வட்டார மக்கள் தங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்ப்பதற்கும் அறிவிப்பதற்கும் மாவட்ட அலுவலகம் வரத் தேவையில்லை.

சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிதியைப் பெறுவதற்கான புதிய தேதி, இடம் மற்றும் நேரத்தைக் குறுந்தகவல் வாயிலாகப் பெறுவார்கள் என்று கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் கூறியது.

இது தவிர நிதியளிப்பு தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை அகப்பக்கம் வாயிலாகவும் அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியது.

சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட 114,211 பேர் இதுவரை 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக 11 கோடியே 42 லட்சத்து 11 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், வெள்ளத்தில் உயிரிழந்த 13 பேர் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 130,000 வெள்ளியும் இதில் அடங்கும் என்றார்.

 


Pengarang :