ECONOMYPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 250 விவசாயிகள் தொடக்க உதவித் நிதியாக வெ.500,000 வெள்ளியைப் பெற்றனர்

சிப்பாங், மார்ச் 2– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 250 விவசாயிகள் தொடக்க உதவி நிதியாக 500,000 வெள்ளியை மாநில அரசிடமிருந்துப் பெற்றனர்.

விவசாய பொருள் உற்பத்தி பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்ய கூட்டரசு அரசாங்கத்தின்  நிதி உள்ளிட்ட உதவிகள் அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும் என்று நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.

வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும் அதிலிருந்து மீண்டெழுந்து அவர்கள் தங்கள் விவசாயத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் உரம் போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

இந்த வெள்ளப் பேரிடரில் விவசாய நிலங்கள் மட்டும் பாதிப்படையவில்லை. மாறாக, விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களும் சேதமுற்றன. இதன் காரணமாக விவசாயிகள் ஒரு கோடி வெள்ளி வரையில் இழப்பை எதிர்நோக்க வேண்டி வந்தது. என்றார் அவர்.

நேற்று இங்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிதியுதவி வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வீடுகளில் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் தலா 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டதாகவும் இஸாம் சொன்னார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.


Pengarang :