ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிளந்தான், திரங்கானுவில் வெள்ள நிலைமை  சீரடைகிறது

கோலாலம்பூர், மார்ச் 5- நாட்டின் கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ள நிலைமை தொடர்ந்து சீரடைந்து வருகிறது. அங்கு தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

கிளந்தான் மற்றும் திரங்கானுவில்  இன்று காலை 8.00 மணி நிலவரப்படி மொத்தம் 3,408 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

கிளந்தான் மாநிலத்தில் தற்போது 836 குடும்பங்களைச் சேர்ந்த 2,730 பேர் 10 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 3,308 பேராக (1,022 குடும்பங்கள்) இருந்தது.

மாநிலத்திலுள்ள அனைத்து ஆறுகளிலும் வழக்கமான அளவில் நீர் மட்டம் உள்ளதாக மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை தனது அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளம் காரணமாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட தும்பாட் மாவட்டத்தின் இரு இடங்கள் மற்றும் பாசீர் மாஸ் மாவட்டத்தின் நான்கு பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் ஏற்படுத்தப்படவில்லை என்று தெனாகா நேஷனல் நிறுவனம் கூறியது.

திரங்கானுவில் 232 குடும்பங்களைச் சேர்ந்த 678 பேர் 4 துயர் துடைப்பு மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர். நேற்றிரவு 8.00 மணியளவில் இந்த எண்ணிக்கை 926 ஆக இருந்தது.

பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் எச்சரிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகுந்த கவனப்  போக்கை கடைபிடிக்கும்படி மாநில பேரிடர் மேலாண்மை குழு கூறியது.


Pengarang :