ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பு மருந்து கொள்முதல்- முதல் கட்டமாக 110,000 நோயாளிகளுக்கு வழங்கப்படும்

கோலாலம்பூர், மார்ச் 5- கோவிட்-19 நோய்க்கு சிகிச்சையளிக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான பைசர் நிறுவனத்தின் பெக்ஸ்லோவிட் இரு வாரங்களில் மலேசியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோய்த் தாக்கம் அதிகம் உள்ள நோயாளிகளுக்கு வழங்குவதற்காக முதல் கட்டமாக 110,000 மருந்துகளை மலேசிய கொள்முதல் செய்வதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

நமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்த மருந்து ஆக்ககரமான பயனைத் தருவது தெரியவந்துள்ளது. பைசர் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பெக்ஸ்லோவிட் மருந்தை கூடுதல் எண்ணிக்கையில் தருவிக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, மேலும் இரு வகையான மருந்துகளை வாங்கவிருக்கிறோம். ஆஸ்ட்ராஸேனோக்காவின் மோல்னுபிரவிர் அவற்றில் ஒன்று. இன்னொரு மருந்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் அவர்.

தேசிய சிறுநீரக அறவாரியத்தின் ஏற்பாட்டிலான 16 வது டயாலிசிஸ் மாநாட்டை இன்று இங்கு தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய கைரி, பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான உறுதி மொழியை வழங்குவதற்கு ஏதுவாக மைசெஜாத்ரா செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டில் கடுமையான சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

 


Pengarang :