ECONOMYHEALTHNATIONAL

அதிக வாடகையின் எதிரொலி: மெகா பி.பி.வி.கள் இனியும் உகந்தவை அல்ல-கைரி

பொந்தியான், மார்ச் 7- அதிக வாடகை காரணமாக அனைத்துக் கோவிட்-19 மெகா தடுப்பூசி மையங்களின் (பி.பி.வி.) செயல்பாடுகளை மார்ச் 16 ஆம் தேதி முதல் மூடச் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது என்று அதன் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

பெரிய மாநாட்டு அரங்குகளை உள்ளடக்கிய இந்த மையங்கள் இனிச் சிக்கனமாகச் செயல்படுவதற்கு உகந்தவை அல்ல என்பதை அமைச்சு கண்டறிந்துள்ளதாக அவர் கூறினார்.

அந்த மையங்கள் இலவசமாக வழங்கப்பட்டவை  அல்ல. அவற்றைப் பயன்படுத்த நாம் பணம் செலுத்த வேண்டும், இனியும் இந்த ஒருங்கிணைந்த அல்லது மெகா பி.பி.வி.களில் இருந்து தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.

தனியார் அல்லது சுகாதாரக் கிளினிக்குகள் போன்ற சிறிய இடங்களைப் பயன்படுத்துவது இனிப் போதுமானதாக இருக்கும் என்று   குக்கு நகரிலுள்ள  செர்காட் சுகாதார மையத்திற்கு வருகை புரிந்த பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களில் பெரும்பாலோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால் தற்போது கோவிட்-19 தடுப்பூசி பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கைரி மேலும் குறிப்பிட்டார்.

ஜோகூரில் மட்டும், எழுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர், மேலும் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 தடுப்பூசித்  திட்டத்தைப் பொறுத்தவரை  பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.

அனைத்து மெகா தடுப்பூசி மையங்களும் மார்ச் 16 முதல் மூடப்படும் என்று சுகாதாரத் துறை தலை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா நேற்று அறிவித்தார்.


Pengarang :