ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஸ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ள அபாயம்- அச்சத்தில் உறைந்த குடியிருப்பாளர்கள்

ஷா ஆலம், மார்ச் 8– கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாக ஷா ஆலம் வட்டாரத்தில் குறிப்பாகத் தாமான் ஸ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம் ஏற்படுவதற்குரிய அபாயம் நேற்றிரவு ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த பொது மக்கள் இரவு முழுவதும் கண் விழித்து நிலைமையைக் கண்காணித்து வந்ததோடு தங்கள் வாகனங்களையும் உடைமைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.

கிள்ளான் ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து கொள்ளளவைத் தாண்டியதால் புக்கிட் லஞ்சோங் மற்றும் தாமான்  ஸ்ரீ மூடாவில்  தடுப்பணைகளில் நீர் கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாகத் தாமான் ஸ்ரீ மூடா மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள டேசா கெமுனிங், லெம்பாயோங் போன்ற பகுதிகளில் சாலைகளில் நீர் பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக இவ்வட்டார மக்கள் உடனடியாகத் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். குறிப்பாகக் கெமுனிங்- ஷா ஆலம் நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

மேலும் பலர், பாதுகாப்பு கருதி அருகிலுள்ள தங்கள் உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் நாடினர். எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலை நீர் வடிந்து நிலைமை சீரானது.

இதனிடையே,  வெள்ளம் அபாயம் காணப்பட்ட  புக்கிட் லஞ்சோங் மற்றும் தாமான் ஸ்ரீ மூடா ஆகிய பகுதிகளுக்குக் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் நேற்றிரவு விரைந்து நிலைமையை நேரில் கண்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து தனது பேஸ்புக் மூலம் காணொளியில் பேசிய அவர், தடுப்பணைகளில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக ஆற்று நீர் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதாகச் சொன்னார்.

இப்பிரச்னைக்குத் தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட தரப்பினரைத் தாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி மாநிலத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாமான் ஸ்ரீ மூடாவும் ஒன்றாகும்.

அந்த வெள்ளப் பேரிடரில் தங்கள் உடைமைகள் மற்றும் வாகனங்களை இழந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும்  அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் தீராத பிரச்னையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.


Pengarang :