ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிலாங்கூரில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 1,215 ஆக உயர்வு

ஷா ஆலம், மார்ச் 8- இன்று காலை 11.00 மணி நிலவரப்படி வெள்ளம் காரணமாகச் சிலாங்கூரிலுள்ள 9 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 1,215 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை 8.00 மணிக்கு அங்குத் தங்கியிருந்த 1,122 பேருடன் ஒப்பிடுகையில் இது 93 பேர் அதிகமாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மொத்தம் 298 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்தத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தின் பல பகுதிகளில் குறிப்பாகப் பூச்சோங்கில் இன்று அதிகாலை தொடங்கி வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் நேற்று மாலை பெய்த அடை மழையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

நேற்று மாலை 3.00 மணி தொடங்கி சுமார் மூன்று மணி நேரத்திற்கு நீடித்த இந்த அடை மழை காரணமாக பண்டார் பாரு சுங்கை பூலோ, கம்போங் கோம்பாக் பத்து ஆராங், கம்போங் மேலாயு குண்டாங், கம்போங் மேலாயு சுங்கை செராய் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.


Pengarang :