ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

தொடர் மழையே நிலச்சரிவுக்குக் காரணம்- மந்திரி புசார் தகவல்

அம்பாங், மார்ச் 11- இங்குள்ள தாமான் புக்கிட் பெர்மாய் 2 குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு வெட்டு மர நடவடிக்கைகள் உள்பட எந்தவொரு சந்தேகத்திற்குரிய நடவடிக்கையும் காரணம் அல்ல என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தினார்.

அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவது  தொடர்பில் பொது மக்களிடமிருந்து ஊராட்சி மன்றம் எந்தவொரு புகாரையும் இதுவரை பெற்றதில்லை என்று அவர் சொன்னார்.

இந்த பகுதி வெற்றிடமாக இருந்துள்ளது. இங்கு வெட்டு மர நடவடிக்கைகளோ நிலச் சீராக்கப் பணிகளோ மேற்கொள்ளப்படவில்லை. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக மண் நகர்வு ஏற்பட்டிருக்கலாம் சந்தேகிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

இப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ளது தொடர்பில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் இதுவரை எந்த புகாரையும் பெறவில்லை. இங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாமான் பெர்மாயில் நிலச்சரிவு அபாயம் குறித்த புகாரை அது பெற்றுள்ளது என்றார் அவர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை இன்று காலை பார்வையிட்ட பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :