ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இமய மலை உச்சியில் யு.பி.எம். கொடி- சாதனை படைக்கத் தயாராகிறார்      டி. ரவிச்சந்திரன்

செர்டாங், மார்ச் 21- உலகின் மிக உயர்ந்த இமயமலையின் உச்சியில் மலேசிய புத்ரா பல்கலைக்கழக (யு.பி.எம்.) கொடியை நாட்டுவதற்கு தயாராகிறார் அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான டி. ரவிச்சந்திரன்.

மொத்தம் 8,849 மீட்டர் உயரம் கொண்ட அந்த எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்து சாதனை படைக்கும் முயற்சியை இவ்வாண்டு தனியொருவராக மேற்கொள்ள 57 வயதான ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.

Puncak Dunia @Everest  எனும் யு.பி.எம்.மின் இந்த மலையேறும் திட்டத்தின் வாயிலாக எவரெஸ்ட் மலை உச்சியில் கொடியை நாட்டிய மலேசியாவின் முதல் பல்கலைக்கழகமாக யு.பி.எம். விளங்கும் என்று ரவிச்சந்திரன் சொன்னார்.

கடந்த 2006 மற்றும் 2007 இல் இமயத்தின் உச்சியை அடைந்து மலேசிய கொடியை நாட்டிய நிலையில் இம்முறை சற்று மாறுபட்டு யு.பி.எம். கொடியை நாட்டவிருக்கிறேன் என்று அப்பல்கலைக்கழகத்தில் விவசாயத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவரான அவர் கூறினார்.

இங்குள்ள யு.பி.எம். பல்கலைக்கழகத்தில் கொடி ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வரும் வெள்ளிக் கிழமை தாம் நேப்பாளம் புறப்படவுள்ளதாக கூறிய அவர், மலையேறும் பணி வரும் 28 ஆம் தேதி தொடங்கி மே மாத இறுதியில் முடிவுக்கு வரும் என்றார்.

இந்த மலையேறும் பணிக்கான ஏற்பாடுகள் குறித்து கருத்துரைத்த அவர், இறுதிக்கட்ட தயார் நிலைக்காக இரு பயிற்சி நடவடிக்கைகளை நேப்பாளத்திலுள்ள மலைப்பகுதிகளில் தாம் மேற்கொள்ளவுள்ளதாகச் சொன்னார்.

ஏற்கனவே இரு முறை நான் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ள போதிலும் பயிற்சி என்பது அவசியமாகத் தேவைப்படுகிறது. மலையேற ஆரம்பித்தவுடன் நமக்கு சீதோஷ்ண நிலை பெரும் சவாலாக விளங்கும் என்றார் அவர்.


Pengarang :