ECONOMYMEDIA STATEMENT

மது போதையில் விபத்து- போலீஸ்காரருக்கு மரணம் விளைவித்த மோகன் ராவுக்கு சிறை, அபராதம்

கோலாலம்பூர், மார்ச் 25- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மதுபோதையில் வாகனம் ஓட்டி போலீஸ்காரர் ஒருவருக்கு மரணம் விளைவித்ததோடு மற்றொரு போலீஸ்காரருக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும் 15,000 வெள்ளி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

குற்றச்சாட்டிற்கு எதிராக நியாயமான சந்தேகங்களை எதிர்த் தரப்பு எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து என். மோகன் ராவ் (வயது 48) என்ற அந்த ஆடவருக்கு மாஜிஸ்திரேட் நேர்ஷிலா ரஹிமி இத்தண்டனையை விதித்தார்.

அபாரதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 10 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க உத்தர விட்ட மாஜிஸ்திரேட், மோகன் ராவின் வாகனமோட்டும் லைசென்சையும் ஐந்து ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதிலிருந்து தடை விதித்தார்.

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் அளவு மதுவை அருந்தியிருந்த மோகன் ராவ் தலைநகர் ஜாலான் செமேன்தான் சாலையில் ஏற்பட்ட விபத்தில் கான்ஸ்டபிள் முகமது ஜம்ரி சின்சியான் (வயது 25) மரணமடைவதற்கும் கான்ஸ்டபிள் ஓஸ்மான் இப்ராஹிம் (வயது 23) படுகாயம் அடைவதற்கும் காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி விடியற்காலை 3.30 மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் வெ. 8,000 முதல் வெ.20,000 வரையிலான அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 44(1)(பி) பிரிவின் கீழ் மோகன் ராவுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டிருந்தது.


Pengarang :