ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் அதிரடி சோதனை- 1.33 டன் கஞ்சா பறிமுதல், நால்வர் கைது

ஷா ஆலம், மார்ச் 27- சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு இடங்களில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் 33 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 1.33 டன் எடையுள்ள கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

சுபாங் ஜெயா, ரவாங் மற்றும் செமினியின் நான்கு இடங்களில் மாலை 4.40 மணி முதல் இரவு 11.00 மணி வரை புக்கிட் அமான் மற்றும் சிலாங்கூர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட அச்சோதனையில் 23 முதல் 46 வயது வரையிலான நான்கு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

அச்சோதனை நடவடிக்கையில் அந்த போதைப் பொருளை பத்திரப்படுத்தி வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வீடொன்றிலிருந்து இரண்டாவது கிரேட் வகையைச் சேர்ந்த கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்த து கண்டு பிடிக்கப்பட்டது என்று இன்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இரு வேலையில்லாத நபர்கள், ஒரு வர்த்தகர் மற்றும் ஒரு விநியோகப் பணியாளரை உள்ளடக்கிய அந்த கும்பல் இவ்வாண்டு ஜனவரி மாதம் மத்தியிலிருந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட ஆடவர்களில் ஒருவன் போதைப் பழக்கத்தை கொண்டிருக்கும் வேளையில் மேலும் இருவர் போதைப் பொருள் தொடர்பான  குற்றப்பதிவுகளை கொண்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

அந்த கடத்தல் கும்பலிடமிருந்து நான்கு வாகனங்கள் மற்றும் ரொக்கம் உள்பட 331,900 வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அவர், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் உள்ளிட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 37 லட்சம் வெள்ளியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :