ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

அசாதாரண மழைப் பொழிவால் பாதிப்பு- மலைச்சாரல் ஸ்திரத்தன்மை மீது ஆய்வு-இஷாம் ஹஷம் தகவல்

சபாக் பெர்ணம், மார்ச் 28- ஆபத்தான மலைச்சாரல்களை அடையாளம் காணும் பணிக்கு இத்துறையில் நிபுணத்துவம் கொண்ட மாநில அரசின் துணை நிறுவனமான செல்கேம் சென். பெர்ஹாட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண மழைப்பொழிவு காரணமாக மலைச்சாரல்களில் மண் மிருதுவாகியுள்ளதை கருத்தில் கொண்டு இத்தகைய ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

சில மலைச்சாரல்கள் எந்நேரத்திலும் சரிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளன. அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மலைச்சாரல்கள் மிகுந்த ஆபத்து கொண்டவையா அல்லது மிதமான ஆபத்து கொண்டவையா என்பதை  நாம் கண்டறிய வேண்டியுள்ளது என்றார் அவர்.

உதாரணத்திற்கு, அம்பாங், புக்கிட் பெர்மாய் பகுதியைச் குறிப்பிடலாம். மண்சரிவு ஏற்படுவதற்கான எந்த அறிகுறியையும் அது கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு கேலோங் பேராடைஸ் வாட்டர்ஃபுரோண்ட் ரிசோர்ட் சுற்றுலா மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலைச்சரிவு பிரச்னை தொடர்பில் முறையான ஒருங்கிணைப்பு எதுவும் தற்போது இல்லாததை கருத்தில் கொண்டு இதன் தொடர்பில் சிறப்புக் கூட்டம்  விரைவில் கூட்டப்படவுள்ளதாகவும் இஷாம் கூறினார்.

மலைச்சரிவு தொடர்பான கண்காணிப்பு அதிகாரத்தில் ஒரு பகுதி ஊராட்சி மன்றங்களிடமும் மற்றொரு பகுதி பொதுப்பணித்துறையிடமும் உள்ளன. இதனை கண்காணிப்பதற்கு பிரத்தியேக செயல்குழு தற்போதைக்கு இல்லை என அவர் விளக்கினார்.

இதனைக் கருத்தில் கொண்டு மலைச்சாரல்களைக் கண்காணிப்பதற்கு சிறப்பு குழு தேவை என்று ஆட்சிக்குழுவில் தாம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :