ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

குயோ ஆற்றின் கரைகளை வலுப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும்- இங் ஸீ ஹான்

ஷா ஆலம், மார்ச் 28 – பூச்சோங், தாமான் கின்ராராவில் உள்ள சுங்கை குயோ ஆற்றின் கரைகளை வலுப்படுத்தும் மற்றும் உறுதிப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும்  என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

சுமார் 300 மீட்டர் நீள திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரும்  விளம்பரம் கடந்த வாரம் வெளியிடப்பட்டதாக அவர் சொன்னார்.

மேலும், ஆழம் குறைந்தும் குறுகலாகியும் வரும் குளத்தை ஆழப்படுத்தும் பணிகளைக் கண்காணிப்பதற்காக ஜசெக கின்ராரா  குழுவினர் இன்று காலை கோலாம் போஹோல்  பகுதிக்கு   வருகை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

கோலம் போஹோல் குளத்தில் தூர்வாரும் பணியை தொடங்கியதற்காக கோலாலம்பூர் வடிகால் நீர்ப்பாசனத் துறைக்கு   நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஜூலை தொடக்கத்தில் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.

குளத்தை ஆழப்படுத்தும் பணி மற்றும்  கரையை உறுதிப்படுத்தும் பணியின் வாயிலாக தாமான் கின்ராரா பகுதியில்  வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டுமாரு மாநில ஆட்சிக்குழு  உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டார்.

கனமழை பெய்யும் சமயங்களில் இப்பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர் நோக்குவதால் தாமான் கின்ராரா குடியிருப்பாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு  நடப்பு வெள்ளத் தணிப்பு பணிகள் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :