ECONOMYNATIONAL

ஊக்கத் தடுப்பூசி பெறாதவர்களின் மைசெஜாத்ரா சான்றிதழ் அழிக்கப்படுமா? சுகாதார அமைச்சு மறுப்பு

கோலாலம்பூர், மார்ச் 29 – கோவிட்-19  ஊக்கத் தடுப்பூசி பெறாதவர்களின் இலக்கவியல்  சான்றிதழ்களை அரசாங்கம் அழித்துவிடும் என சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் விரைவு நடவடிக்கை குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில் சுகாதார அமைச்சின் இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சினோவேக் தடுப்பூசியை முதன்மை தடுப்பூசியாகப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும்  60 வயதுக்கும்  மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெறாத பட்சத்தில் அவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான தகுதியை இழப்பார்களே தவிர மைசெஜாத்ராவில் அவர்களின் இலக்கவியல் தடுப்பூசி சான்றிதழ் அழிக்கப்படாது  என்று சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியது.

மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என சம்பந்தப்பட்டத் தரப்பினர்  அறிவுறுத்தப்படுவதோடு  உண்மையான மற்றும் சமீபத்திய தகவல்களைப் பெற சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களை வலம் வரும்படி பொதுமக்கள்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Pengarang :