ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட துப்புரவுப் பணி முற்றுப் பெற்றது

ஷா ஆலம், ஏப் 1- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட துப்புரவுப் பணி முழுமையடைந்துள்ளது.

சுபாங் ஜெயா, பூச்சோங், கம்போங் ஸ்ரீ அமான், கம்போங் தெங்கா மற்றும் கம்போங் சுங்கை பாருவில் இப்பணிகள் முழுமையாக முற்றுப் பெற்றுள்ளதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

கம்போங் கெனாங்கான், ஸ்ரீ லங்காஸ், தாமான் ஸ்ரீ மூடா, தாமான் கின்ராரா, உலு லங்காட் மற்றும் கிள்ளான் ஆகியவையும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்ட பகுதிகளில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

கால்வாய்களை சுத்தம் செய்வதை இலக்காக கொண்ட இந்த இரண்டாம் கட்டப் பணி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இனி வழக்கமான குப்பை அகற்றும் பணிகளில் கவனம் செலுத்த முடியும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டத் துப்பரவுப் பணி மே மாதம் முற்றுப் பெறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் அப்பணி எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே முழுமை பெற்றதாக அவர் சொன்னார்.

சிலாங்கூரில் எதிர் காலத்தில் நிகழக்கூடிய எந்தவொரு எதிர்பாராத நிகழ்வுகளையும் எதிர் கொள்ள தமது தரப்பு முழு தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசின் துணை நிறுவனமான கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட், வெள்ளத்திற்கு பின் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி கட்டம் கட்டமாக மேற்கொண்டு வந்தது.


Pengarang :