ECONOMYSELANGORSMART SELANGOR

டிஜிட்டல் பார்க்கிங்- கார் நிறுத்த கட்டண முறையை எளிதாக்குகிறது

ஷா ஆலம், ஏப் 2- சிலாங்கூரிலுள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் நேற்று அமல்படுத்தப்பட்டுள்ள இலக்கவியல் கார் நிறுத்தக் கட்டண முறை (இ-கூப்பன்) பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் செயலி (எ.ஸ்.எஸ்.பி.) மூலம் கார் நிறுத்தும் கட்டணத்தை செலுத்துவது பழைய காகித கூப்பன் முறையைக் காட்டிலும் எளிதாக உள்ளதாக தனியார் துறை ஊழியரான நபிலா ஹூஸ்னா ஹலிம் (வயது 27) கூறினார்.

இப்போது பெரும்பாலோர் விவேக கைப்பேசியை வைத்துள்ளனர். முன்பு, கார் நிறுத்தக் கட்டணத்தை செலுத்த மறந்து விட்டால் காருக்கு திரும்பி வந்தாக வேண்டும். தற்போது இ-கூப்பன் முறையில் நேரடியாக கட்டணத்தை செலுத்தி விட முடியும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே, இ-கூப்பன் முறை குறித்து பொது மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக கார் நிறுத்துமிடங்களில் அதிகமான பணியாளர்களை ஊராட்சி மன்றங்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஜாக்கி பிலாதெனேக் (வயது 64) கூறினார்.

பலர் இன்னும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்யாமலிருக்கின்றனர். வரும் நாட்களில் கார் நிறுத்தக் கட்டணங்களைச் செலுத்துவதில் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என்றார் அவர்.

சிலாங்கூர் அரசு இன்று தொடங்கி மாநிலம் முழுவதும் இ-கூப்பன் முறையை அமல் செய்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளேஸ்டோர், ஏப்ஸ்டோர் அல்லது ஹூவாய் ஸ்டோர் ஆகிய தளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்.


Pengarang :