ECONOMYSELANGOR

ஸ்ரீ கெம்பாங்கானில் ஆடவர் கொலை- விசாரணைக்கு நால்வர் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், ஏப் 7- ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் புக்கிட் செர்டாங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக போலீசார் நான்கு ஆடவர்களைக் கைது செய்துள்ளனர்.

முப்பது முதல் 40 வயதுக்குட்பட்ட அந்நால்வரும் கிள்ளான், தாமான் மஸ்னாவில் சாலையோரம் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன் கூறினார்.

ஸ்ரீ கெம்பாங்கானைச் சேர்ந்த அந்நால்வரும் குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள வேளையில் அவர்களில் ஒருவன் போதைப் பொருள் வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்ற அவர் சொன்னார்.

அந்த கொலையில் சம்பந்தப்பட்டதை அந்நால்வரும் ஒப்புக் கொண்டதாக கூறிய அவர், அதிருப்தி மற்றும் பழி வாங்கும் நோக்கம் இந்த கொலைக்கு காரணமாக இருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.56 மணியளவில் ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் புக்கிட் செர்டாங்கிலுள்ள உணவகம் ஒன்றின் எதிரே 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் முகம் மற்றும் கழுத்தில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடக்கக்காணப்பட்டார்.

இச்சம்பவத்தின் போது போலி எண் பட்டையுடன் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் புரோட்டோன் வீரா ரக காரையும் தாங்கள் பறிமுதல் செய்துள்ளதாக ஏசிபி அன்பழகன் கூறினார்.


Pengarang :