ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஷா ஆலமில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு வெ.15 கோடி ஒதுக்கீடு- டத்தோ பண்டார் தகவல்

ஷா ஆலம், ஏப் 15- கடந்தாண்டு டிசம்பர் மாதம் மாநகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததைத் தொடர்ந்து ஷா ஆலம் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை (சுசுட்)ஷா ஆலம் மாநகர் மன்றம் அமல்படுத்தவுள்ளது.

தாமான் ஸ்ரீ மூடா, டி.டி.டி.ஐ., தாமான் மெஸ்ரா, செக்சன் 13 ஆகிய பகுதிகளை இலக்காக கொண்ட இத்திட்டத்தை அமல்படுத்த மாநகர் மன்றம் 15 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது கூறினார்.

இந்த சுசுட் வெள்ளத் தடுப்புத் திட்டம் குறுகிய காலம், மத்திய காலம் மற்றும் நீண்ட காலம் என மூன்று கட்ட திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தொடக்கமாக 5 கோடி வெள்ளி செலவில் குறுகிய காலத் திட்டத்தை அமல்படுத்தவிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களில் கால்வாய்கள் மற்றும் நீர் சேகரிப்பு குளங்களை சீரமைப்பதாகும் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற சுசுட் வெள்ளத் தடுப்புத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

ஷா ஆலம் மாநகரில் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான விவேகத் திட்டத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் சுசுட் சின்னத்தையும் அவர் வெளியிட்டார்.

முன்னதாக இந்த கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைத் திட்டத்தை அமல்படுத்தும் முதல் ஊராட்சி மன்றமாக ஷா ஆலம் மாநகர் மன்றம் விளங்குவதாக குறிப்பிட்டார்.


Pengarang :