ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் அரசின் பரிவுமிக்க வணிக திட்டத்தின் வழி வெ.700,000 வருமானம்

காஜாங், ஏப் 17- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான மக்கள் பரிவு விற்பனைத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 700,000 வெள்ளி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 22 சட்டமன்றத் தொகுதிகளில் கோழி, முட்டை, மீன், இறைச்சி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ததன் மூலம் இந்த வருமானம் பெறப்பட்டதாக அக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் ராஸி கூறினார்.

முட்டை, கோழி, பாக்கெட் சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்பொருள்கள் மிகவும் நியாயமான விலையில் அதாவது சமையல் எண்ணெய் பாக்கெட் ஒன்று 2.00 வெள்ளி, கோழி 12 வெள்ளி மற்றும் முட்டை ஒரு தட்டு 10 வெள்ளி என்ற விலையில் விற்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்கள் மலிவான விலையில் விற்கப்படுகின்றன. பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தரமான பொருள்களை மலிவான விலையில் பெறுவதற்கு முன்வர வேண்டும் என்றார் அவர்.

இங்குள்ள தாமான் ஜெனாரிஸ் குடியிருப்பாளர் சங்க நடவடிக்கை மையத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட மலிவு விலை விற்பனைத் திட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அதிகமான மக்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர்களும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களும் இத்திட்டம் குறித்து தங்கள் தொகுதியில் அதிகம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதிகமான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இத்திட்டத்தின் வெற்றிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உதவ முடியும். காரணம், சில இடங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் குறைவான ஆதரவு கிடைத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :