ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இ.பி.எஃப். சிறப்பு நிதி மீட்புத் திட்டம்-  இன்று முதல் பணம் பட்டுவாடா செய்யப்படும்

கோலாலம்பூர், ஏப் 18– ஊழியர் சேம நிதி வாரியத்தின் சிறப்பு நிதி மீட்புத் திட்ட விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதல் பணம் பட்டுவாடா செய்யப்படும். இம்மாதம் 20 ஆம் தேதி முதல் பணம் வழங்கும் பணி மேற்கொள்ளப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னாகவே இ.பி.எஃப். அத்திட்டத்தை அமல்படுத்துகிறது.

விண்ணப்பதாரர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்யும் பணி இன்று திங்கள் கிழமை தொடங்கி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் டத்தோஸ்ரீ துங்கு ஸப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.

சேம நிதி வாரிய பணத்தை மீட்கும் நடைமுறையை விரைவில் அமல்படுத்த முடியுமா என்று பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக தம்மைக் கேட்டு வருவதாக அவர் சொன்னார்.

உங்கள் குரல் என் காதில் விழுகிறது. ஆகவே, ஊழியர் சேம நிதி வாரியத்திடம் கலந்தாலோசித்தப் பின்னர் இம்மாதம் 20 ஆம் தேதி அல்லாமல் 18 ஆம் தேதியே பணத்தை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கும் பணியைத் தொடங்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்றார் அவர்.

இந்த சிறப்பு நிதி மீட்புத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு கடந்த ஏப்ரல் முதல் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிதி மீட்புத் திட்டம் வரும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை  மேலும் மகிழ்ச்சியுடையதாக ஆக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதோ மட்டுமின்றி மலேசியர்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதிலும் இத்திட்டம் ஓரளவு துணை புரியும் என்றார் அவர்.


Pengarang :