MEDIA STATEMENT

வெ. 400,000 மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல்- பெண் உள்பட அறுவர் கைது

கோலாலம்பூர், ஏப் 18– போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட அறுவரை  கோலாலம்பூர் போலீசார் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் கைது செய்துள்ளனர்.

ஓப்ஸ் கேஸ்டன் நடவடிக்கையின் கீழ் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனை நடவடிக்கையில் 386,757 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஏசிபி ஜஸ்மிரோல் ஜமாலுடின் கூறினார்.

தலைநகர், ஜாலான் புத்ரா மாஸ் மற்றும் ஜாலான் சென்டானாவிலும் பெட்டாலிங் உத்தாமா மற்றும் தாமான் பெட்டாலிங்கிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 20 முதல் 45 வயது வரையிலான அச்சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு 9.00 மணி முதல் மறு நாள் விடியற்காலை 5.10 மணி வரை இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
இச்சோதனை நடவடிக்கையில் 121,510 வெள்ளி மதிப்புள்ள 3.2 கிலோ ஷாபு, 116,722 வெள்ளி மதிப்புள்ள 8.4 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

இவை தவிர, கெனாபிஸ், எர்மின் 5 போதை மாத்திரைகள், மெத்தாமின், ஆகிய போதைப் பொருள்களோடு 2,700 வெள்ளி ரொக்கமும் இச்சோதனை நடவடிக்கையின் போது  கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :