ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இளையோர் புகைபிடிப்பதை தடுக்கும் மசோதா ஜூலையில் மக்களவையில் தாக்கல்- கைரி தகவல்

கோலாலம்பூர், ஏப் 20- இளையோர் புகைபிடிப்பதை தடுக்கும் சட்ட மசோதா வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது அது நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இளையோர் மத்தியில் காணப்படும் புகைக்கும் பழக்கத்தை இந்த புதிய சட்டம் முடிவுக்கு  கொண்டு வரும் என்று தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்தவர்கள் அறவே புகையிலை சார்ந்த பொருள்களை வாங்க முடியாது. இதனை அமல்படுத்துவது கடினமான பணி என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதனைக் களைய நாங்கள் கடமையாகப் பாடுபடுவோம். வாருங்கள், நாம் அனைவரும் இணைந்து இளையோர் புகைபிடிப்பதற்கான அனைத்து வழிகளையும் மூடுவோம் என அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

புகைப்பதற்கு எதிரான சட்ட மசோதா அமலாக்கம் தொடர்பில் அரசு சாரா அமைப்பு ஒன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் முடிவுகள் தாங்கிய ஊடகம் ஒன்றின் செய்தியையும் அவர் இப்பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த கருத்துக் கணிப்பில் 24 வயதுக்கும் கீழ்ப்பட்ட 95 விழுக்காட்டினரும் சிகிரெட் மற்றும் வேப் எனப்படும் மின்சிகிரெட் பழக்கம் உள்ள 89 விழுக்காட்டினரும் புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Pengarang :