ECONOMYMEDIA STATEMENT

குடும்ப உறுப்பினர்களை வெட்டிய நபர் ஒரு வாரத் தேடலுக்குப் பின் கைது

கோத்தா திங்கி, ஏப் 21– இங்குள்ள கோல செடிலி, கம்போங் செடிலி கெச்சிலில் உள்ள வீடொன்றில் கடந்த வியாழக்கிழமை தன் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பாராங் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியப் பின்னர் தலைமறைவான நபரை போலீசார் ஒரு வாரத் தேடலுக்குப் பின்னர் நேற்று கைது செய்தனர்.

அந்த 38 வயது நபர் கூலாய், ஜாலான் பெர்சியாரான் இண்டாபுராவில் நேற்று காலை 11.50 மணியளவில் பிடிபட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹூசேன் ஸமோரா கூறினார்.

அந்த ஆடவர் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் மெத்தம்பெத்தமின் வகை போதைப் பொருளை பயன்படுத்தியிருந்தது தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117 வது பிரிவின் கீழ் அவ்வாடவரை இன்று தொடங்கி அடுத்த வாரம் புதன்கிழமை வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை தாங்கள் கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 326 வது பிரிவின் கீழ் அவ்வாடவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

கடந்த வியாழக்கிழமை இரவு 7.11 மணியளவில் தன் மனைவி, மாமியார், மைத்துனி, மைத்துனர் ஆகியோரை அந்நபர் பாராங் கத்தியால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பியோடி தலைமறைவானார்.


Pengarang :