ECONOMYMEDIA STATEMENT

இணைய முதலீட்டு மோசடி- ஆசிரியர் 45,500 வெள்ளியை இழந்தார்

சிரம்பான், ஏப் 22- டெலிகிராம் செயலி வாயிலாக செய்யப்பட்ட முதலீட்டு விளம்பரத்தை நம்பி ஆசிரியர் ஒருவர் 45,500 வெள்ளியை பறிகொடுத்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை டெலிகிராம் சமூக ஊடக குழுவில் இணைந்த அந்த 52 வயது ஆசிரியருக்கு கவர்ச்சிகரமான முதலீட்டு தொகுப்பில் பங்கு பெறுவதற்கான வழங்கப்பட்டதாக ஜெம்புல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹூ சாங் ஹூக் கூறினார்.

மூன்று முதல் ஆறு மணி நேரம் மட்டுமே அந்த முதலீட்டு வர்த்தகம் நீடிக்கும் என்றும் வர்த்தகம் முடிவுக்கு வரும் போது 15,000 வெள்ளி வரை லாபம் ஈட்ட முடியும் என்றும் அந்த ஆசிரியருக்கு ஆசை வார்த்தை காட்டப்பட்டது என்று அவர் சொன்னார்.

அந்த ஆசிரியரும் முதல் தொகுப்பை தேர்வு செய்து 1,000 வெள்ளியைச் செலுத்தினார். மூன்று முதல் ஆறு மணி நேர வர்த்தகத்தில் அவருக்கு 16,000 வெள்ளி லாபம் கிடைத்தது. இந்த லாபத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அவர், அதே தினத்தில் ஆடவர்  ஒருவருக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் 1,000 வெள்ளியை செலுத்தினார்.

அதோடு மட்டுமின்றி கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நிறுவனங்கள் மற்றும் வேறு நபர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் 44,500 வெள்ளியைச் அவர் செலுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலும் 27,000 வெள்ளியைச் செலுத்தும் பட்சத்தில் அவரின் வங்கிக் கணக்கில் 82,500 வெள்ளி சேர்க்கப்படும் என அக்கும்பல் கூறியுள்ளது.

அக்கும்பலிடம் தாம் ஏமாந்து போனதை உணர்ந்து அந்த ஆசிரியர் நேற்று போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக சூப்ரிண்டெண்டன் ஹூ கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் தாங்கள் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :