ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அவசர சூழல்களை எதிர்கொள்ள முழு தயார்  நிலையில் தீயணைப்புத் துறை

கோலாலம்பூர், மே 2 - கடந்த  ஏப்ரல் 1 ஆம் தேதி  முதல் அமலில் இருக்கும் எண்டமிக் கட்டம் மற்றும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்படக்கூடிய அவசர சூழல் மற்றும் ஆபத்துக்களை எதிர்கொள்ள  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை முழு தயார் நிலையில் உள்ளது.

தீயணைப்புத் துறை முழுமையாகத் தயாராக இருக்கும் அதேவேளையில் இடர்மதிப்பீட்டு அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் விரும்புவதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமை  இயக்குநர்  டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட்   கூறினார்.

காட்டுத் தீ, தற்போது நாடு எதிர்நோக்கும்  வறட்சி காரணமாக ஏற்படக்கூடிய நீர் நெருக்கடி, திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடிய நிச்சயமற்ற வானிலை மாற்றம் மற்றும் கோவிட் -19 இன்னும் தணியாத நிலையில்  மக்களின் சுதந்திரமான  நடமாட்டம் ஆகியவற்றை அந்த இடர் மதிப்பீடு உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார். 
எல்லைகள் திறக்கப்பட்டதும்  சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் போலவே வணிக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளும் புத்துயிர்ப் பெற்றுள்ளன.

இந்த முறை ரமலான் சந்தைகளிலும் பெரும் கூட்டம் இருந்தது.மேலும் கோவிட் -19 பரவல் அதிகரிப்பு பற்றிய கவலைகளும் நமக்கு உள்ளன என்று அவர் சமீபத்தில் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

குறிப்பாக நோன்புப் பெருநாள் விடுமுறையின் போது அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் சாலை விபத்துகளை எதிர்கொள்ளவும் தாங்கள் தயாராக இருப்பதாக முகமது ஹம்டான் மேலும் தெரிவித்தார். .

நாடு முழுவதும் சுமார் 12,500 பணியாளர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் ஓய்வுப் பகுதிகளில் ரோந்து செல்வார்கள். அத்துடன் வணிகக் கட்டிடங்கள், பேரங்காடிகள் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்குப் பகுதிகளையும் அவர்கள் கண்காணிப்பார்கள் என்றார் அவர்.

Pengarang :