ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

செமினி ஆற்றில் நீர் தூய்மைக்கேடு- தொழிற்சாலைக்கு எதிராக தடுப்பு ஆணை

கோலாலம்பூர், மே 5- செமினி ஆற்று நீரில் டீசல் வாடை ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் தொழிற்சாலைக்கு எதிராக செயல்பாட்டு உபகரண தடுப்பு (பி.ஒ.கே.) ஆணையை சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது.

செமினி ஆற்றோரத்தில் குறிப்பாக பெரேனாங் தொழில்பேட்டைப் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டப் பின்னர் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குநர் வான் அப்துல் லத்திப் வான் ஜாபர் கூறினார்.

மேல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து நீர் மற்றும் எண்ணெய் கலவை சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த கலவை மீதான இரசாயன ஆய்வு முடிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் 1974 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச்சட்டத்தின் 25வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனறு அவர் சொன்னார்.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதுதவிர, கூடுதல் தண்டனையாக குற்றம் புரியப்பட்ட ஒவ்வொரு தினத்திற்கும் தலா 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.

தூய்மைக்கேட்டை ஏற்படுத்துவதற்குரிய சாத்தியம் உள்ள தொழிற்சாலைகளுக்கு எதிராக தமது தரப்பு தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வரும் என்பதோடு குற்றம் புரியும் தரப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :