ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஓப் செலாமாட் இயக்கம்- சிலாங்கூரில் 3,343 சாலை விபத்துகள் பதிவு

ஷா ஆலம், மே 9- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த பத்து நாட்களாக அமல்படுத்தப்பட்ட 18வது ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது 3,343 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.

அவற்றில் 21 விபத்துகள் உயிரிழப்பை சம்பந்தப்படுத்தியிருந்ததாக சிலாங்கூர் மாநில போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்மான் ஷரியாட் கூறினார்.

நேற்று மாநிலம் முழுவதும் 319 விபத்துகள் நிகழ்ந்ததாகக் கூறிய அவர், இவ்விபத்துகளில் அதிர்ஷ்டவசமாக உயிருடற்சேதம் ஏற்படவில்லை என்றார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பெருநாள் காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது என்று சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில்  அவர் குறிப்பிட்டார்.

சாலையைப் பயன்படுத்தும் போது மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும்படி வானமோட்டிகளைக் கேட்டுக் கொண்ட அவர், வாகனமோட்டும் போது கைபேசியைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என ஆலோசனை கூறினார்.

சாலையில் வாகனங்களைச் செலுத்தும் போது நிதானப் போக்கை கடைபிடிக்கும் அதேவேளையில் மற்ற வாகனமோட்டிகளின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என சொன்னார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பெருநாள் காலத்தின் போது சிலாங்கூரில் 2,110 சாலை விபத்துகள் பதிவாகின. இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை 7.9 விழுக்காடு குறைந்துள்ளது.


Pengarang :