ECONOMY

நாசி கஞ்சா வாங்க ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதாக “டத்தோ“ மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஈப்போ, மே 9- நாசி கஞ்சா உணவுப் பொட்டலங்களை ஈப்போவிலிருந்து வாங்கி வருவதற்கு ஹெலிகாப்டரைப் பயன்படுத்திய நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் மீது வான் பயண வரைபடத்தைப் பின்பற்றத் தவறியதாக இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காலை 9.50 மணிக்கும் 10.00 மணிக்கும் இடையே இங்குள்ள பாடாங் ஈப்போவில் இக்குற்றத்தை புரிந்ததாக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை முகமது ராஃபி கே. சேக்கு (வயது 53) என்ற அந்நபர் மறுத்து விசாரணை கோரினார்.

சிவில் வான் போக்குவரத்து வழிகாட்டி-2 இல் வான் போக்குவரத்து தலைமை இயக்குநர் வரையறுத்துள்ள வான் போக்குவரத்து விதிகளை மீறியதாக முகமது ராஃபிக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயண வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் பெல் 505 ரக ஹெலிகாப்டரை தரையிறக்கியதன் மூலம் தமக்கு வழங்கப்பட்ட பயண வரைபடத்தைப் பின்பற்றத் தவறியதாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

மாஜிஸ்திரேட் ஜெசிகா டாய்மிஸ் முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கில் 2016 ஆம் ஆண்டு வான் போக்குவரத்து விதிகளின் 77(2) வது பிரிவின் கீழ் அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க இச்சட்ட விதி வகை செய்கிறது.


Pengarang :