ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பேரிடர்களை எதிர்கொள்ள மேலும் மூன்று மீட்புப் படகுகள்- எம்.பி.கே.எஸ். கொள்முதல்

ஷா ஆலம், மே 11- இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் விதமாக பந்தாஸ் எனப்படும் அதிரடி நடவடிக்கை குழுவின் பயன்பாட்டிற்கு மேலும் மூன்று மீட்புப் படகுகளை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் வாங்கியுள்ளது.

இரு பைபர் எனப்படும் நார்இழை படகுகள், ஒரு அலுமினியம் படகு மற்றும் இயந்திரங்கள் ஆகியவை பந்தாஸ் அதிரடிக் குழுவின் தளவாடப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

பேரிடர் ஏற்படும் பட்சத்தில் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் பந்தாஸ் அதிரடிக் குழுவினர் விரைந்து உதவிகளை வழங்குவதற்கு இந்த வசதிகள் துணை புரியும் என அது தெரிவித்தது.

இத்தகைய கூடுதல் உபகரணங்களைக் கொண்டிருப்பதன் வாயிலாக மீட்புக் குழுவினர் கிராமங்கள், புறநகர்ப்பகுதி மற்றும் வீடமைப்பு பகுதிகளில் மீட்புப் பணிகளை எளிதாக மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.

பேரிடர் ஏற்படும் பட்சத்தில் மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக ஊராட்சி மன்றங்கள் படகு போன்ற  மீட்பு சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியிருந்தார்.


Pengarang :