ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

லுவாஸ் துரித நடவடிக்கை- லங்காட் ஆற்றில் நீர் தூய்மைக்கேடு தடுக்கப்பட்டது    

ஷா ஆலம், மே 12- லங்காட் ஆற்றின் அருகே உள்ள கால்வாயில் டீசல் எண்ணெய் கசடுகளை முன்கூட்டியே கண்டறிந்ததன் மூலம் அந்த ஆற்றில் நீர் தூய்மைக்கேடு ஏற்படுவதை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் வெற்றிகரமாகத் தடுத்துள்ளது.

டீசல் கலவை கால்வாய் வழியாக லங்காட் ஆறு நோக்கி வருவது குறித்த புகாரை லுவாஸ் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திடமிருந்து நேற்று மாலை  3.45 மணியளவில் பெற்றதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையில் லோரி பழுதுபார்ப்பு பட்டறை ஒன்று அந்த நீர் மாசுபாட்டிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அந்த பழுதுபார்ப்பு பட்டறைக்கு அருகிலுள்ள கால்வாயில் எண்ணெய்க் கழிவுகளை லுவாஸ் அதிகாரிகள் கண்டனர். இதன் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீர் வள மாசுபாடு அவசர வழிகாட்டியின் படி மஞ்சள் குறியீட்டை லுவாஸ் செயல்படுத்தியது.

அந்த பட்டறையின் உள்ளே, வெளியே உள்பட நான்கு இடங்களிலிருந்து மாசுபாடு மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டன எனக் கூறிய அவர், நீர் மாசுபாடு ஏற்பட்ட இடம் செமினி நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது என்றார்.

எண்ணெய் கழிவு லங்காட் ஆற்றில் கலப்பதைத் தடுப்பதற்காக டீசல் கலந்துள்ள கால்வாயில் கார்பன் பவுடர் தூவப்பட்டது என்றார் அவர்.


Pengarang :