ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

இலவச மருத்துவப் பரிசோதனை திட்டத்திற்கு மாநில அரசு வெ.34 லட்சம் ஒதுக்கீடு- மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 15- மாநில மக்கள் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள உதவும் “சிலாங்கூர் சாரிங்“ திட்டத்திற்காக 34 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டத்தின் வாயிலாக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 39,000 பேர் குறிப்பாக மரபு வழி நோய்ப் பிரச்னைகளைக் கொண்டவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காதவர்கள் பலனடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய், குளுகோமா உள்ளிட்ட நோய்களுக்கு இந்த இலவச பரிசோதனைத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று  அவர் சொன்னார்.

இத்திட்டத்திற்கு மைசெஜாத்ரா திட்டத்தின்  வழி எளிதாக பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் தனது டிவிட்டர் பதிவின் வழி தெரிவித்தார்.

நோயின் பின்னணி மற்றும் அதன் தாக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் சிறப்பு பாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னரே இந்த சோதனைக்கான பற்றுச் சீட்டு வழங்கப்படும் எனவும் பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இந்த சிலாங்கூர் சாரிங் திட்டம் குறித்து மேல் விபரங்களை அறிய விரும்புவோர் selangorsaring.selangkah.my எனும் அகப்பக்கம் அல்லது https://drsitimariah.com/talian-suka/ என்ற சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர் இணையத்தளத்தை வலம் வரலாம்.  இதுதவிர 1-800-22-6600 என்ற தொலைபேசி எண்களில் செல்கேர் கிளினிக்கையும் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :