ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

வறட்சியை எதிர்கொள்ள நிலத்தடி நீர் வளம் போதுமான அளவு உள்ளது- நட்மா தகவல்

கோலாலம்பூர், மே 19- தென்மேற்கு பருவமழை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய வறட்சி நிலையினால் உருவாகும் எதிர்பாராத சூழல்களை எதிர்கொள்ள  நிலத்தடி மற்றும் குழாய் கிணறுகள் போதுமான அளவு நீர் வளத்தைக் கொண்டுள்ளதாக நட்மா எனப்படும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் 5,563 குழாய் கிணறுகளை நாடு கொண்டிருப்பதை கனிம வள மற்றும் புவி அறிவியல் துறையின் தரவுகள் காட்டுகின்றன என்று அது தெரிவித்தது.

பேரிடர் மேலாண்மை திட்டங்கள் மேலும்  ஆக்ககரமான முறையில் அமல்படுத்துவதற்கு ஏதுவாக குழாய் கிணறுகள் மற்றும் பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளை வரைபடத்தில் இணைக்கும் பணியை மேற்கொள்ளும்படி நேற்று கூடிய வெப்ப மற்றும் வறட்சி வானிலை மீதான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கனிமவள மற்றும் புவி அறிவியல் துறையை நட்மா பணித்துள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவ மழை இம்மாதம் 14 ஆம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக நாட்டில் குறிப்பாக தீபகற்ப மலேசியா மற்றும் சரவாகில் குறைவான மழை பெய்யும். திறந்த வெளி தீயிடல் சம்பவங்கள் கட்டுப்பாடற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் புகை மூட்டப் பிரச்னையும் எழக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மழையில்லா நாட்கள் குறித்த அறிவிப்பு மற்றும் எல்லை தாண்டிய புகை மூட்டப் பிரச்னை தொடர்பான ஆலோசனைகளை வாரம் எழு நாட்களும் சுற்றுச் சூழல் துறைக்கு மலேசிய வானிலை ஆய்வுத் துறை வழங்க வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று நட்மா வெளியிட்ட அறிக்கை கூறியது.


Pengarang :