ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் உதவிய தன்னார்வலர்களுக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் நன்றி

ஷா ஆலம், மே 20– கெர்லிங்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணியை மேற்கொள்வதில் பெரும் பங்காற்றிய 340 தன்னார்வலர்களுக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளைத் துப்புரவு செய்வதில் உதவிய ஊராட்சி மன்றங்கள் மற்றும் அரசாங்க துறைகளுக்கும் தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நகராண்மைக் கழகத்தின் தலைவர்  முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார்.

இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், செலாயாங் நகராண்மைக் கழகம், சிப்பாங் நகராண்மைக் கழகம், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் கோல லங்காட் நகராண்மைக் கழகம் ஆகியவை ஈடுபட்டன.

இவை தவிர கிள்ளான் நகராண்மை கழகம், சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம், கோம்பாக் நில மற்றும் மாவட்ட அலுவலகம், உலு லங்காட் நில மற்றும் மாவட்ட அலுவலகம், கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பெர்ஹாட் ஆயர் சிலாங்கூர் ஆகிய தரப்பினரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கரம் நீட்டினர்.

பல பகுதிகளில் துப்புரவுப் பணி இன்னும் மேற்கொள்ளப்படும் வேளையில் குறிப்பாக கம்போங் ஜாவாவில் நேற்று பிற்பகல் 1.30 மணி வரை 99 சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்ததாக முகமது  ஹஸ்ரி தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமை உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனத்த மழையின் காரணமாக கெர்லிங், கோல குபு பாரு, தாமான் செரண்டா மக்மோர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :