ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் எங்களின் அடுத்த குறி- டத்தோ ஆயோப் கான் சூளுரை

கோலாலம்பூர், மே 22- நாடு முழுவதும் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் மூளையாகச் செயல்படும் அதன் தலைவர்களுக்கு குறிவைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தவுள்ளனர்.

போதைப் பொருள்  கடத்தல் கும்பல்களின் தலைவர்கள் வெளியில் சுதந்திரமாக உலவும் வரை போதைப் பொருள் கடத்தலை முற்றாக தடுக்க முடியாது என்று புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

போதைப் பொருள் விசாரணைத் துறையின் இயக்குநர் பொறுப்பை ஏற்றது முதல் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிப்பது தனது முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளது என்றார் அவர்.

ஓப்ஸ் தாப்பிஸ் நடவடிக்கையின் மூலம் கடந்த நான்கு மாதங்களில் 1,500 பேரை நாடு முழுவதும் கைது செய்துள்ளோம் என்றார் அவர்.

போதைப் பொருள் விசாரணைத் துறையின் ஏற்பாட்டில் நேற்று இங்குள் கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில்  நடைபெற்ற நோன்புப் பெருநாள் உபசரிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நாட்டிலுள்ள இளைஞர்களின் பாதுகாப்பான  எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் கோரிக்கை தாங்கள் ஏற்றுச் செயல்படுவதாக அவர் ஆயோப் கான் சொன்னார்.


Pengarang :