ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போதைப் பொருள், கெத்தும் பானம் வைத்திருந்த ஆடவர் கைது

கோலாலம்பூர், மே 22- தாமான் ஸ்ரீ கோம்பாக், டேவான் பெரிங்கின் வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை போதைப் பொருள் மற்றும் கெத்தும் போதை பானத்தை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த ஆடவரிடமிருந்து 2 எர்மின் 5 போதை மாத்திரைகள், ஒரு போத்தல் மற்றும் ஐந்து பிளாஸ்டிக் பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த கெத்தும் போதை பானம் ஆகியவற்றை தாங்கள் கைப்பற்றியதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைனால் முகமது முகமது கூறினார்.

“கோம்பாக் செத்தியா  தொகுதி ஒருங்கிணைப்பு அலுவலகப் பணியாளர் ஒருவர் அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நான்கு கெத்தும் பொட்டலங்களுடன் கைது செய்யப்பட்டார்“ என நேற்று சமூக ஊடகங்களில் வெளியானத் தகவலை மாவட்ட போலீஸ் தலைமையகம் நேற்றிரவு 9.55 மணியளவில் கண்டதாக அவர் சொன்னார்.

கைதான அந்த நபர் கேம்பாக் தொகுதி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணியாளர் அல்ல என்பது விசாரணையில் தெரியவந்தது. சமூக ஊடகங்களில் வெளியானதைப் போல் அவர் அலுவலகத்தில் கைது செய்யப்படவில்லை. மாறாக, அந்த மண்டப வளாகத்திலுள்ள கூடாரம் ஒன்றில் பிடிபட்டார் என்றார் அவர்.

கைதான அந்த நபர் 1952 ஆம்  ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 12(2) வது பிரிவு மற்றும் 1952 ஆம் ஆண்டு மருந்துச் சட்டத்தின் 30(3) வது பிரிவின் கீழ் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :