ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

தலைநகரில் மதுபோதையில் வாகனமோட்டிய 23 பேர் கைது

கோலாலம்பூர், மே 22- மது போதையில் வாகனமோட்டிய குற்றத்திற்காக 68 வயது முதியர் உள்பட 23 போரை கோலாலம்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஓப் ஜாலானான் மற்றும்  சாலை போக்குவரத்து குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.

மது போதையில் வாகனமோட்டிய அந்த 23 பேர் தவிர்த்து, சாலையில் சாகச நடவடிக்கையில் ஈடுபடுவது, பந்தயத்தில் பங்கு கொள்வது போன்ற ஆபத்தான செயல்களைப் புரிந்த 8 மோட்டார் சைக்கிளோட்டிகளும் இந்நடவடிக்கையின் போது தடுத்து வைக்கப்பட்டனர் என்று கோலாலம்பூர் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் தலைவர் ஏசிபி ஷராபுடின் முகமது சாலே கூறினார்.

பதினாறு முதல் 19 வயது வரையிலான அந்த எண்மரும் மேல் விசாரணைக்காக கோலாலம்பூர்  சாலை போக்குவரத்து பிரிவுக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 42(1) வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் என்றார் அவர்.

இவர்கள் தவிர, காவல் துறையின் பணிக்கு இடையூறாக இருந்ததற்காக ஒருவரும் திருட்டு மோட்டார் சைக்கிளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவரும் போதைப் பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவரும் இச்சோதனை நடவடிக்கையின் போது பிடிபட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சோதனை நடவடிக்கையின் போது மொத்தம் 435 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதோடு புகைப்போக்கி உள்ளிட்ட சாதனங்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்ததற்காக 13 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :